search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியத் தொகை"

    ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும்நிலையில் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #Pension
    புதுடெல்லி:

    முதியோர், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.

    அந்த ஓய்வூதிய தொகையுடன் மாநில அரசும் தன் பங்குக்கு பணத்தை கூடுதலாக கொடுத்து ஓய்வூதியம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

    ஆனால் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை மிகக் குறைவாக இருக்கிது. அதாவது ஒரு நபருக்கு மாதம் ரூ.200 மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. 11 ஆண்டுகளாக இதே தொகையைத் தான் வழங்கி வருகிறார்கள். மேலும் கூடுதலான நபர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவில்லை.

    எனவே ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும், கூடுதல் நபர்களை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


    இந்த வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த விசாரணையின் போது ஓய்வூதியத் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. மத்திய அரசின் உதவிகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    நாளை மறுநாள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு தகவல்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    அதாவது பென்சன் தொகையை உயர்த்துவது, அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு திட்டத்தை விரிவு படுத்துவது போன்ற தகவல்கள் அதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்தவது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு ஆய்வுகளை தொடங்கி உள்ளது. தற்போது 3 கோடியே 9 லட்சம் பேர் உதவி தொகைகளை பெற்று வருகிறார்கள். அதை 2 மடங்காக்கி 6 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அது பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.

    வருகிற பட்ஜெட்டில் இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக ஆய்வு அறிக்கை பெறப்பட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Pension #CentralGovernment
    ×